ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதின் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை மட்டக்கப்பு மாவட்டம் வெண்றுள்ளது

 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2025 இற்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் (23) வியாழக்கிழம கொழும்பு பண்டாரநாயக ஞாபகாத்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.










இவ்வாண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது திட்டம் “அழகான தீவு – சமாதானமான மக்கள்” என்ற கருப்பொருளின் கீழ், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து நடத்தப்பட்டமை சிறப்பு அம்சமாகும். இவற்றில் சுற்றுச்சூழல் நட்பு தொழிற்துறை பிரிவு, அரசு நிறுவனம் பிரிவு, தனியார் துறை பிரிவு, பாடசாலை பிரிவு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திட்டங்கள் பிரிவு, புதுமையான சுற்றுச்சூழல் நட்பு ஆக்கங்கள் பிரிவு, சுற்றுச்சூழல் அரசல்லாத அமைப்புகள் பிரிவு, ஊடகத் துறை பிரிவு மற்றும் சமூக ஊடகத் துறை பிரிவு ஆகிய ஒன்பது துறைகளுக்கு 132 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றில் 17 தங்க விருதுகள், 29 வெள்ளி விருதுகள், 38 வெண்கல விருதுகள், 47 பாராட்டு (மெரிட்) விருதுகள் மற்றும் 1 சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது.


இவ்விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்கான தங்க விருதினை மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேசத்தில் இயங்கிவரும் அல்றா அலுமினியம் தனியார் நிறுவனம் பெற்றுக் கொண்டது. இந்த விருதினை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமிருந்து அல்றா நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். உனைஸ் பெற்றுக் கொண்டார். இவ்விருதானது இரும்பு அல்லாத பாரியளவிலான உலோக உற்பத்திக் கைத்தொழில் நிறுவனத்திற்காக மட்டக்களப்பு மாவட்டம் முதல் தடவையாக பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ. சுந்தரேசன் தெரிவித்தார்.


மேலும் வைத்தியசாலைகளுக்கான விசேட பிரிவில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்கான வெள்ளி விருதினைப் பெற்றுக் கொண்டது. இந்த விருதினை சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பதபெண்டியிடமிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே. புவனேந்திரநாதன் பெற்றுக் கொண்டார்.


இவ்விருதினைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அல்ற நிறுவன தலைவர் உனைஸ் கருத்து தெரிவிக்கையில் “இந்த ஜனாதிபதி சுற்றுச்சூழல் தங்க விருது பெற்றமை எங்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகும். இது தரம், பொறுப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் எங்கள் உறுதியைக் காட்டுகிறது. இந்த வெற்றியை எங்கள் முழு குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கே அர்ப்பணிக்கிறேன்.” ஏனக் குறிப்பிட்டார். 


மேலும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே. புவனேந்திரநாதன் கருத்து வெளியிடுகையில் “இரண்டு வருடங்களாக எமது குழு முயற்சியுடன் முதல் தடவையாக இவ்விருதுக்கு விண்ணப்பித்திருந்தோம். எமது சுகாதார சேவைக்கு மேலதிகமாக இத்திட்டத்தில் நாம் வெற்றிகண்டுள்ளோம். நாம் அவதானித்த சிறிய சிறிய குறைபாடுகளை நிவத்தி செய்துகொண்டு தொடர்ந்தும் வெற்றியை நோக்கி பயணிப்போம், இவ்வெற்றியானது எமது நிறுவனத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களது ஒருங்கிணைத்த உழைப்பிற்கான வெற்றி என்பதில் பெருமிதமடைகின்றேன். மேலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்குவித்து ஒத்துளைப்பு வழங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரலீஸ்வரன் அவர்களுக்கு இவ்விடத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார். 


சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பதபெண்டி நிகழ்வில் உரையாற்றுகையில, அரசு, தொழிற்துறை மற்றும் பொதுமக்கள் ஒரே இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும்போது எதுவும் சாத்தியமற்றதல்ல எனக் குறிப்பிட்டார்.இவ்விருது விழா சாதனைகளை கொண்டாடும் நிகழ்வாக மட்டும் இல்லாமல், பசுமைமிக்க, சுத்தமான மற்றும் நிலையான தேசம் நோக்கிய முன்னேற்றப் பயணத்திற்கு ஒரு புதிய படியாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில் தொழில் மற்றும் முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துண்ணெத்தி, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவவல, சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொட, சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், விருது பெற்றவர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

Powered by Blogger.