மட்டக்களப்பு மாவட்டத்தில் சுபர் பெயார் (Super Fair) மட்டு முயற்சியாண்மை 2025 விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் சிவானந்தா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று (24) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் சிறுதொழில் முயற்சிப் பிரிவினால் இவ்வருட சுபர் பெயார் (Super Fair) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக இந்த சுபர் பெயார் (Super Fair) நடைபெற்றது.
சிறுதொழில் முயற்சியாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட பல உற்பத்திகள் இங்கு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
இதன் போது இப்பிரதேச மக்கள் ஆர்வத்துடன் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம். எஃப். ஸனீர், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கணக்காளர் எஸ். சுந்தரலிங்கம், மாவட்ட சிறு தொழில் முயற்சியாண்மை மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ். விநோத், சிறு தொழில் முயற்சி பயிற்சி உத்தியோகத்தர்களான தி. நிலோஷன், திருமதி. க. தாரணி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











