மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் 71வது வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் (7) திகதி நிறைவு பெற்றது.
கடந்த 29.08.2025 திகதி வெள்ளிக்கிழமை ஆலய
பங்குத்தந்தை வின்சென்ட்
ஜெரிஸ்டன் அடிகளார் தலைமையில், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த திருவிழாவில் தினமும் திருச்செபமாலை, மறையுரைகள் மற்றும் திருப்பலி என்பன நடைபெற்றன.
கடந்த (06) திகதி மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்லோஸ் ஆலயத்திலிருந்து அன்னையின் திருத்தலத்தை நோக்கிய பாதயாத்திரையாக மக்கள் சென்றடைந்தனைத் தொடர்ந்து மாலை மறையுரை, நற்கருணை வழிபாடு, திருச்சொரூப பவனி, விசேட திருப்பலி என்பன நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து (07) திகதி காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட பரிபாலகர் அன்டன் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில், திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.
ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் மற்றும் அருட் தந்தையர்கள் இணைந்து விசேட கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
திருச்சொரூப பவனி, திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்று, கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
வவுணதீவு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
திருத்தல திருவிழாவின் இறுதி நாள் பெருவிழா விருப்பலியில் இலங்கையின் மன்னார், புத்தளம், களுத்துறை உள்ளிட்ட பல்வேறுபட்ட மாகாணங்களில் இருந்து அதிகளவிலான அன்னையின் பக்தர்கள் வருகை தந்ததுடன் அன்னையின் ஆசீரையும் பெற்றுச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கிழங்கையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரைத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும் ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை திருத்தலம் இலங்கை திருநாட்டில் தூய சதாசகாய அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயமாகும்.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் ஆயித்தியமலை என்னும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமத்தில் சகாய அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. மட்டு நகரிலிருந்து வலையிறவு வவுணதீவு ஊடாக 17 கிலோமீற்றர்களும் மட்டு. நகரிலிருந்து செங்கலடி பதுளை வீதி கரடியனாறு ஊடாக 28 கிலோமீற்றர் தொலைவில் ஆயித்தியமலை சகாய அன்னையின் திருத்தலம் அமைந்துள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு உலக மரியன்னை ஆண்டில் அருட்தந்தை.ஜோர்ஜ் வம்பேக் அடிகளார் ஓர் ஓலைக்குடிலை அமைத்து அதில் தூய சதா சகாய அன்னையின் படமொன்றினை வைத்தே இவ் ஆலயத்தினை ஆரம்பித்திருந்தார்.
அக்காலப்பகுதியில் மறைமாவட்ட ஆயராகப்பணியாற்றிய அதிவந்தனைக்குரிய இக்னேசியஸ் கிளெனி ஆண்டகை அவர்களே முதலாவது திருநாள் திருப்பலியினை நிறைவேற்றினார்.
1980 இற்கு முன்னர் இவ்வாலயத்திற்கு இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் வந்துசெல்லும் வழக்கம் இருந்தது. இதனால் வழிபாடுகள் யாவும் தமிழிலும், சிங்களத்திலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இக்காலப்பகுதியிலே இது தேசிய யாத்திரைத் திருத்தலமாக அரசினால் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை வெளியிடங்களிலிருந்து வருகை தந்த பக்தர்கள் ஆலய வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பையும் வழங்கிவந்துள்ளனர்.
அதேபோன்று தற்போதும் ஆலய விழாவிற்கு இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்தும் அதிகளவிலான அன்னையின் பக்தர்கள் வருகை தருவதுடன், பெருந்திரளானோர் முன்னையைப்போன்றே ஆலயத்திற்கு யாத்திரையாக வருவதும் வழமையாகவே நடைபெற்றுவருகின்றது.
அன்னைக்கு வைத்த நேர்த்தியை நிறைவேற்றும் வண்ணம் ஆலய வளாகத்தில் சிறு குடிசை அமைத்து நவநாள் காலங்களில் ஆலயத்தினை பராமரிக்கும் செயற்பாடுகளில் அன்னையின் பக்தர்கள் ஈடுபட்டுவருவதுடன், அன்னையை வழிபடுவதும் வழமையாகவே காணப்பட்டுவருகின்றது.