“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, சொந்தக் காணியுள்ளதாய் இருந்தும் வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு, ரூபா ஒரு மில்லியன் நிதியுதவியின் மூலம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி மண்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள இருதயபுரம் கிழக்கு, திமிலை தீவு மற்றும் புதுநகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு பூரணமாக முடிக்கப்பட்ட மூன்று வீடுகள் 2025.10.06 ஆம் திகதி இன்று சம்பிரதாயபூர்வமாக பயனாளியிடம் கையளிக்கப்பட்டதுடன், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 28 வீடுகள் திறந்துவைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வுகளிற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அதிவிருத்திக் குழுவின் தலைவருமாகிய கந்தசாமி பிரபு அவர்கள் கலந்துகொண்டு வீடுகளை திறந்துவைத்ததுடன், குறித்த நிகழ்வுகளில் பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு இரண்டு கட்டங்களில் 97 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.