தயவு செய்து அலட்சியம் வேண்டாம்


நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 8:30 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உயிரிழப்பு விஷயம் மக்களுக்கு முக்கியமான செய்தியை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.



ரோபோ சங்கர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் கல்லீரல் பிரச்சனைதான். இந்த கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.


1. ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு

2. லிவர் ஹெபடைட்டிஸ் - ஈரல் வீக்கம்

3. லிவர் சிரோசிஸ் - ஈரல் சுருங்குதல்

4. லிவர் ஃபெயிலியர் - ஈரல் செயலிழத்தல்


ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு


கல்லீரல் கொழுப்பு நோய், இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய், இரண்டாவது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.


ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோயை பொறுத்தவரையில், இது அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படும். கல்லீரலின் வேலையே உடலுக்குள் வரும் தேவையில்லாத நச்சை வெளியேற்றுவதுதான். மது என்பது உடலுக்கு ஒரு துளி கூட தேவையில்லாததது. மது மெல்ல கொல்லும் விஷம். எனவேதான் மதுவை நாம் எடுத்துக் கொள்ளும்போது கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறது. மதுவை சிதைத்து அதை வெளியேற்ற முயற்சி செய்கிறது. இந்த முயற்சியின் போது நச்சு பொருட்கள் உருவாகி கல்லீரல் செல்களை சேதப்படுத்துகின்றன. இந்த சேதம் காரணமாக கல்லீரலில் கொழுப்பு படிந்து அது வீங்கி விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அது ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் உருவாக வழி வகுத்து விடும்.


ஈரல் கொழுப்பின் இரண்டவது வகை


மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத்தான், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று சொல்லப்படுகிறது. இதற்கான சரியான காரணம் இதுதான் என்று இப்போது வரை முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வாழ்க்கை முறை மற்றும் உடல்நல பிரச்சினைகள் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக அதிகப்படியான உடல் எடை, வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்திருப்பது, இரண்டாம் வகை சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் இருப்பது, முறையற்ற உணவு முறை, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உயர் ரத்த அழுத்தம் இருப்பது இவற்றால் இந்த கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.


 நாட்டு மருந்து கல்லீரல் நோயை குணப்படுத்துமா?


மேற்குறிப்பிட்ட இரண்டு வகைகளும், நோய்களின் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் காட்டாது ஆனால் நோய் முற்றிய நிலையில் சோர்வு, பலவீனம், வயிற்று மேல் பகுதியில் வலி அல்லது அசௌகரியம் போன்றவை ஏற்படலாம். இதுவே சில சமயங்களில் மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் போன்ற அறிகுறிகளாகவும் தென்படலாம்.


இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது மிக முக்கியம். ஆனால் பலரும் சிகிச்சையை பாதியிலேயே கைவிட்டு விட்டு நாட்டு மருந்துகளையும், சுய மருத்துவத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணமாக மஞ்சள், பால் நெருஞ்சில், ஆப்பிள் சைடர் வினிகர், நெல்லிச் சாறு இதையெல்லாம் எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் கொழுப்பை கரைக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் கல்லீரல் கொழுப்பை முற்றிலுமாக சரி செய்ய இதெல்லாம் போதுமானது என அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே கல்லீரல் விஷயத்தில் சுய மருத்துவமும், முழுமையான நாட்டு மருத்துவமும் ஆபத்தானதாகும்.


லிவர் ஹெபடைடிஸை புரிந்துக்கொள்ளுங்கள்


கல்லீரல் நோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது லிவர் ஹெபடைடிஸ். இது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பாதிப்புகளை கொண்ட ஒருவரின் ரத்தம் இன்னொருத்தருக்கு ஏற்றப்படும் பொழுது இந்த பாதிப்பு பரவலாம். அதாவது ஒரு மேன்ஷனில் ஒரே சவரக்கத்தியை பலர் பயன்படுத்தும் போது இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல அதிகப்படியான மது அருந்துதலும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.


இது தவிர மருந்துகளின் பக்க விளைவுகள் மூலமாக கூட இந்த பாதிப்புகள் ஏற்படலாம். மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலுக்கு நச்சு அதிகளவு சேர்ந்து ஹெபடைடிஸ் ஏற்படுகிறது. கல்லீரல் எப்படைட்டீஸ் என்பது கல்லீரல் நோய்களின் இரண்டாவது கட்டமாகும்.


லிவர் ஹெபடைடிஸுக்கு நாட்டு மருந்து கேட்குமா?


இந்த இரண்டாவது வகையில், முதலில் சொன்னது போலவே தொடக்கத்தில் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டு கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை எடுத்துக் கொள்வது மூலம் நோய் சரியாகும் என்று நம்புவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் கீழாநெல்லியும், கரிசலாங்கண்ணியும் லிவர் ஹெபடைடிஸ் நோயை முழுமையாக குணப்படுத்தும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அல்லது போதுமான சான்றுகள் இல்லை.


குறிப்பாக ஹெபடைடிஸ் பாதிப்பு, வைரசால் ஏற்படும் பொழுது அதற்கு சிகிச்சைகள் தனித்தனியாக உள்ளன. ஒவ்வொரு வைரஸ் பாதிப்புக்கும் சிகிச்சை வெவ்வேறானவை. எனவே சரியான நோய் அறிதல் இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்வது உயிரிழப்புகளைதான் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்.


கல்லீரல் நோய்களில் மூன்றாவது வகை தான் லிவர் சிரோசிஸ்


கல்லீரல் கடுமையாக மற்றும் நிரந்தரமான சேதம் அடைந்த ஒரு நிலையைதான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இந்த நோயை குணப்படுத்த எந்த ஒரு நாட்டு மருந்தும் கிடையாது. சிரோசிஸ் என்பது கல்லீரல் திசுக்கள், வடு திசுக்களாக மாறிய நிலையாகும். இந்த வடு திசுக்கள் கல்லீரலின் செயல்பாடுகளைத் தடுத்து அது பழைய மாதிரி செயல்படாதவாறு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்துகிறது. சில நாட்டு மருந்துகள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம். கவனமாக படியுங்கள் உதவ மட்டும்தான் செய்யலாம். முற்றிலும் குணப்படுத்தாது. ஆனால் அவை எல்லாம் மேலே சொன்ன இரண்டு நிலைக்குதான். இந்த மூன்றாவது நிலையில் நாட்டு மருந்துகளை நம்பக்கூடாது.


ஏனெனில் கல்லீரல் செயலிழப்பு புற்றுநோய்க்கு வழி வகுக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையாகும். எவ்வளவு சீக்கிரமாக மருத்துவமனையை அணுகி முறையான சிகிச்சை பெற முடியுமோ அதை அவ்வளவு சீக்கிரமாக செய்ய வேண்டும். ஆனால் நாட்டு மருந்தை நம்புவது என்பது இந்த பிரச்சனையை பொறுத்தவரையில் பொன்னான நேரத்தை வீணடிப்பது போன்றதாகும்.


நாட்டு மருந்து தீர்வு கிடையாது


லிவர் ஃபெயிலியர் என்பது கல்லீரல் நோயின் நான்காவது மற்றும் இறுதி நிலையாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு நிச்சயம். இந்த பாதிப்பை நாட்டு மருந்துகள் மட்டுமல்லாது ஆங்கில மருந்தால் கூட சரி செய்ய முடியாது. இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. இந்த அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும்.


லிவர் பெயிலியர் ஆன ஒருவருக்கு நாட்டு மருந்துகள் கொடுப்பதன் மூலம் உடலில் நச்சுக்கள் அதிகமாக சேர வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரத்தப்போக்கு சிறுநீரக செயலிழப்பு போன்ற அவசர நிலைகளும் ஏற்படும். எனவே இந்த பிரச்சனைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்வது மட்டுமே தீர்வாகும்.

Powered by Blogger.