தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை.
டயாலிசிஸ் பிஸ்துலா அறுவை சிகிச்சைக்காக ஜெகதீஷ் என்ற வாலிபர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு காத்திருந்தார்.
இந்நிலையில், இதே கோட்டா பகுதியைச் சேர்ந்த மனிஷ் என்பவர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை எடுக்க இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தனர். மனிஷுக்குத் துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் என்பவர் மருத்துவமனையில் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஆபரேஷன் உதவியாளர்கள் ஜெகதீஷ் என்ற நோயாளியை அழைக்க, ஆபரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருந்த மணிஷ்ஷின் தந்தை ஜெகதீஷ், தன்னைத்தான் அழைப்பதாக நினைத்து கையை உயர்த்த, அவரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று அவரது கையில் பிஸ்துலா அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர்.
தனக்குப் பதிலாக தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை துவங்கியதை அறிந்த மகன் மனிஷ், மருத்துவர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். பின்னர், அவரின் தந்தை ஜெகதீஷ் தையல் போடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.
பின்னர் மணிஷ்க்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் , இன்னொரு ஜெகதீஷுக்கு பிஸ்துலா சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.
அறுவை கிகிச்சையில் நடந்த இந்த குழப்பம், ராஜஸ்தான் மீடியாக்களில் இடம் பிடிக்க, மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தவறுக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
மகனின் அறுவை சிகிச்சைக்காகத் துணைக்குப் போன தந்தைக்கு ஆறு தையல் போடப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் வைரல் ஆகியுள்ளது.