அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி வீர வீராங்கனைகளுக்கான நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.09.2025) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அலுவலகப் பணிக்கு மேலாக இவ் போட்டிகளில் பங்குபற்றுவது பாராட்டத்தக்க விடயம் எனவும், அதிலும் குடும்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் குறிப்பாக பெண் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், தேசியப் போட்டிகளில் பங்குபற்றுவது சவாலான விடயம் எனவும், அந்தவகையில் எமது மாவட்ட வீரர்கள் வீராங்கனை பங்குபற்றி வெற்றியீட்டி யாழ்ப்பாண மாவட்டத்தினை பெருமைப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இப் போட்டிகளுக்கு முன்னின்று உழைத்த வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்களினையும் அரசாங்க அதிபர் பாராட்டினார். மேலும்,
எமது பலநாள் கனவான சர்வதேச கிரிக்கெட் மைதானம் மண்டைதீவில் அமையவிருப்பதும், உள்ளக விளையாட்டு அரங்கு அமையவிருப்பதும் பாடசாலை களுக்கான விளையாட்டு அபிவிருத்தி க்கும் அரசாங்கமானது முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், இதன் மூலம் எமது மாவட்டம் விளையாட்டு துறை மேன்மேலும் அபிவிருத்தி அடையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்குபற்றியவர்கள் தமது அனுபவப் பகிர்வினையும் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது 27.06.2025 அன்று கொழும்பு எட்வேட் ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் கலப்பு போட்டியில் 1 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான D பிரிவில் விலக்கல் முறையில் 1 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான B பிரிவில் விலக்கல் முறையில் 2 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான D பிரிவில் சுழற்சி முறையில் 3 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான போட்டிச் சான்றிதழ்களும், பதக்கமும் அணிவிக்கப்பட்டதுடன், அணிகளுக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம பொறியிலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், வடக்கு வலய பதிவாளர் நாயகம், உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.