இலங்கையர்தினம் " தேசிய விழாவிற்கான பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ஒழுங்குபடுத்தலில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (01) இடம் பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினுடாக இலங்கையில் நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் தேசிய அடையாளத்தை முழுமையாக்குவதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இன மத பேதமின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடக்கூடிய ஒரு தினமாக இலங்கயர் தினம் கொண்டாடப்படவுள்ளன.
எமது அடையாளத்தை நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையாக மீட்டெடுப்பதற்குமான ஒரு முயற்சியாக "இலங்கை தின தேசிய விழா" வினைச் செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் அனைத்து சமூகக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் "இலங்கையர்தின தேசிய விழாவை" நடாத்துவதற்கான மாவட்ட மட்டத்தில் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கலாசார, பாரம்பரிய விழுமியங்களைப் பற்றி அதிகாரிகள், துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கலாசார திணைக்கள பணிப்பாளர் கே.எஸ்.டில்ஹானி, இணைப்புச் செயலாளர் பிரேமரத்ன தென்னக்கோன், உதவி பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கலாசார திணைக்களமானது இலங்கையர் தினத்தை கொண்டாடுவதற்கு 25 மாவட்டத்திற்கும் சென்று மக்களின் கருத்துக்களை சேகரித்து வருவதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.