நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை தமது கண்டனங்களை தெரிவித்துள்ளது.
அவர்களது அறிக்கையில்
த.தே .கூ .பிரித்தானியக் கிளையின் உள்ளக்குமுறல்
இலண்டனில் வாழும் கிழக்கு மாகாணத்தைக் குறிப்பாக மட்டகளப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் த தே .கூ. பிரி.கிளையினருடன் தொடர்பு கொண்டு தமது விசனங்களைத் தெரிவித்துக்கொண்டனர். அதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துவதோடு, இவற்றை மிகவும் அக்கறையோடு கருத்தில்கொண்டு தீர்மானங்களை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
அண்மையில் நடந்த நாடாளுமன்ற வேட்பாளர் தெரிவுகள், கிழக்கு மாகாண முக்கிய கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்களைக் கலந்துகொள்ளாது ஒரு சில தனிநபர்களின் ஆதிக்கத்தின் பேரில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறைபட்டுக்கொண்டனர். பல தகுதியான, தரமான பெண் வேட்பாளர்கள் இருந்தும், ஏற்கனவே 2010இல் தமிழ் தேசியத்துக்கு எதிரான ஒரு சுயேட்ச்சைக் குழுவின் ஆதரவில் போட்டியிட்டு 100 இக்கும் குறைவான வாக்குகளை மட்டும் பெற்ற ஒரு பெண்ணை வெறும் தனிப்பட்ட சிபாரிசில் தெரிவு செய்தது ஒரு இழுக்கு என்றும், இது கட்சியின் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
வேட்பாளர் தெரிவில், சனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படாமல், ஒரு சிலரின் செல்வாக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதானது, தலைமைப்பீடத்தின்மீது அதிருப்தியையும், அதன் இயலாமையையும் எடுத்துக்காட்டுகின்றது என்பது அவர்களின் வாதம்.
கடந்த காலத்தில், நடந்த இப்படியான சில சம்பவங்கள், உதாரணமாக, மாகாண முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தது போன்ற முடிவுகள் கட்சியின் பின்னடைவுக்கும், தேசியக் கட்சிகளின் ஊடுருவலுக்கும் கட்சி முக்கியஸ்தர்களின் அதிருப்திக்கும் வழிவகுத்து இன்று வட - கிழக்கில் பல மாற்று அணிகள் உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளன. மக்களின் கருத்தை அறிவதட்கு மதிப்பளிக்காமல் ஒரு சிலர் கட்சியை வழிநடத்துவது இனியாவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
கொழும்பில் கூடி முடிவுகள் எடுக்குமுன்பு வடக்கிலும், கிழக்கிலும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி, கருத்துக்களைக் கேட்டறிந்து தரமான, தகுதியான வேட்பாளர்களை முடிவுசெய்யுமாறு பலர் எம்மிடம் தெரிவித்ததைத் தங்களுக்குத் தெரியப்படுத்துவது எமது கடமை.
இப்படியான குற்றச்சாட்டுகள் கிழக்கிலிருந்து மட்டுமன்றி, பரவலாகப் புலம்பெயர் மக்களிடமிருந்து எமக்கு அறியக்கூடியதாக உள்ளது. இதைத் தலைமையிலுள்ளவர்கள் மிக்க காத்திரமாக எடுத்து, இனிவரும் நடவடிக்கைகளில் சனநாயகப் பண்புகளுக்கும், மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்பதில் பிரித்தானியக் கிளையும் உடன்பாடாக இருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாகத் தந்தை செல்வா அவர்களால், பல தலைவர்களை உயிர்ப் பலி கொடுத்து, தியாகத்தின் ஊடாக வளர்க்கப்பட்ட கட்சி இன்று பல்வேறு விமர்சனங்களுக்கும், ஒரு சிலரின் வழிகாட்டலுக்கும் உட்பட்டுப் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது யதார்த்தம்.
தற்போதைய வேட்பாளர் தெரிவில், ஏற்கனவே இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்தில் இருந்தும் எதுவுமே செயலாற்றாத பலரை மீண்டும் மூன்றாவது தடவையும் தெரிவு செய்துள்ள கட்சியின் முடிவு பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது ஆன்மீகப் பணிக்கும் இலாயக்கானவர்களை அரசியல் அதுவும் ஒரு விடுதலைப் போராட்டப்பாதையில் ஈடுபடவைக்கும் கட்சியின் முடிவையிட்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். தகுதியானவர்கள், தரமானவர்களை உள்வாங்கத் தலைமை தயங்குகிறதா? அல்லது தமது இருப்புகளைத் தக்க வைக்க தரமற்றவர்களைத் தேடுகிறதா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
இக்கருத்துகளைத் தயவு செய்து சீர்தூக்கிப் பார்த்து வருங்காலத்தில் கட்சியை ஒரு விடுதலைப்போராட்டத்துக்குத் தகுதியுள்ளதாக மாற்றியமைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
அன்புடன் தங்கள் உண்மையுள்ள
வே.ஜெ .போஸ் செயலாளர்,
த.தே.கூ பிரி கிளை