கிழக்கு மீட்பர்களின் அதிகார மோகத்தால் கிழக்கு பறிபோகும் அபாயம்


 ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் கிழக்குக்கு ஒரு அமைச்சு கிடைக்கும் அது வியாளேந்திரனுக்கு கிடைக்கும் என்று பலரும் நம்பியிருந்தனர்.

உண்மையிலேயே கிழக்கு மாகாணத்திற்கு ஒரு அமைச்சு வழங்கியிருக்கவேண்டும். 38000 தமிழ் மக்கள் கோட்டாபாஜ அவர்களை நம்பி வாக்களித்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றிக்கடனாக ஒரு அமைச்சினையாவது வழங்கியிருக்கவேண்டும்.

வியாளேந்திரனவர்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கும் என்று அவர்களின் கட்சி முக்கியஸ்தர்கள் எழுதி வந்தனர். அமைச்சு பதவி கிடைக்காமல் போனதன் பின்னர் மொட்டு கட்சியையும், பிள்ளையானின் கட்சியையும் விமர்சிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

மொட்டுக்கட்சி கிழக்கை ஏமாற்றிவிட்டது என்றும், வியாளேந்திரனுக்கு அமைச்சு கொடுக்கவேண்டாம் என்று பிள்ளையான் கட்சியே கூறியதாகவும் எழுதியுள்ளனர்.

எனது கேள்வி அப்போ பிள்ளையானின் கட்சியின் கதையை மட்டும் கேட்கும் அளவில்தானா கோட்டாபாஜ அணி உள்ளது. 

அப்படியானால் பிள்ளையானால் மட்டும்தானா கிழக்கை மீட்க முடியும். 
இவர்களின் கருத்துக்கள் அரசியல் சாணக்கியமற்று சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது.

யாருக்கு அமைச்சு கொடுக்கவேண்டும் யாருக்குகொடுக்கக்கூடாது என்பதை ஜனாதிபதியோ அவர் கட்சியோதான் தீர்மானிக்கவேண்டும். அதை இன்னொருத்தர் தீர்மானிக்க அவர்கள் முட்டாள்தனமான அரசியல் செய்யவில்லை.

நாம் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம் வியாளேந்திரன் அணியினரின் செயற்பாடுகள் அவர்களுக்கான பதவிகளையும், இருப்பையும் இல்லாமல் செய்யலாம் என்பதனை.
கோத்தா அணியினர் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு இருப்பவர்கள் அல்ல. கிழக்கிலே என்ன நடக்கிறது, யார் வேலை செய்கிறார்கள், யாருக்கு மக்கள் செல்வாக்கு உண்டு, யாருக்கு பதவி வழங்கவேண்டும் என்பதனை அவர்களின் புலனாய்வுப்பிரிவு அறிக்கை சமர்ப்பித்திருக்கும். அதற்கு ஏற்றால்போன்றுதான் அவர்களின் தீர்மானங்கள் அமைந்திருக்கும்.

கிழக்கிலே இப்போது நடப்பது கிழக்கை யார் ஆழ்வது? யார் முதலமைச்சராவது என்பதற்கான பனிப்போர். ஒருவருக்கு குழிபறித்து இன்னொருத்தர் முன்னுக்கு வருவது சாத்தியமற்றது.

கிழக்கை மீட்க புறப்பட்டவர்கள் தங்களின் போட்டியால் கிழக்கை அடவு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என்கின்ற நிலை. 

Powered by Blogger.