16.01.2026
வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற் பகுதிகளுடன் ஒப்பிடும்போது வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை ( Sea Surface Temperature - SST) அசாதாரணமாக மிகக் குறைவாக ( இன்னொரு வகையில் கூறுவதானால் அசாதாரண குளிராக) காணப்படுகின்றது.
அத்தோடு அந்த குளிர் நீர் வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இலங்கையின் தெற்குப் பகுதிக்கு கடத்தப்படுகின்றது. இன்னோரு வகையில் கூறுவதானால் இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள சற்று அதிகமான கடல்மேற்பரப்பு வெப்பநிலை வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக செல்லும் குளிர்நீரினால் குறைக்கப்படுகின்றது.
பொதுவாக உலகின் பல நாடுகளின் வானிலைக் கோலங்களைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிகப் பிரதானமான பங்கினை வகிக்கின்றது.
ஆகவே வடக்கு பிராந்திய கடற்பரப்பில் காணப்படும் அசாதாரண குளிர் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
அத்தோடு டிட்வா புயலுக்கு பின்னரான நாட்களில் பெரும்பாலான நாட்களின் இலங்கையின் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருகின்றது.
காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் நாம் மிகக் கூடிய கரிசனை கொள்வது சிறந்தது.
- நாகமுத்து பிரதீபராஜா -
